சிங்காநல்லூர் வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நேற்று காத்திருந்த பொதுமக்கள். படம்:ஜெ.மனோகரன் 
தமிழகம்

கோவையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: அரசின் வழிகாட்டுதல் இல்லாததால் இளைஞர்கள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசிக்கு கோவையில் தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில் நேற்று மீண்டும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18வயது முதல் 44 வயது வரையுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 20-ம் தேதி தொடங்கிவைத்தார்.

முதல்கட்டமாக கோவைக்கு 51,700 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அரசிடமிருந்து இதுவரை வழிகாட்டுதல் வழங்கப்படாததால் நேற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் 4 நாட்களுக்குப் பிறகு, கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் நடைபெற்றது. மாநகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் மட்டுமேதடுப்பூசி போடும் பணி நடைபெற்ற தால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். கோவேக்சின் தடுப்பூசிசெலுத்தப்படாததால், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “சிங்காநல்லூர் வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சாய்பாபா காலனி அருகே உள்ள ராமலிங்கம் காலனி உயர்நிலைப்பள்ளி, மணியகாரம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி, ராம்நகர் ரங்கநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் மட்டுமேதடுப்பூசி போடும் பணி நடை பெற்றது. இதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஒரு மையத்துக்கு தலா250 தடுப்பூசிகள் வீதம் மொத்தம்1,250 தடுப்பூசிகள் செலுத்தப்பட் டன. இருப்பைப் பொறுத்து நாளை (இன்று) 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT