தமிழகம்

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வேதனை

இரா.கார்த்திகேயன்

கரோனா பாதிப்புக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலித்தும் தனியார் மருத்துவமனைகளில் சரிவர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக திருப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் குடும்பத்தினர் கூறியதாவது:

திருப்பூரை சேர்ந்த 43 வயது நபர்தனியார் பின்னலாடை நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கரோனா தொற்றுக்கு ஆளாகிய அவரை, பெரும் சிரமத்துக்கிடையே திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு போதிய சிகிச்சை வழங்கப்படவில்லை. ஆக்சிஜன் விநியோகத்தை அவ்வப்போது நிறுத்திவைத்தனர். ஒரே சிலிண்டரில் 4 பேருக்கு ஆக்சிஜன் வழங்குவதால், பலருக்கும் சீராக செல்லாதநிலை ஏற்பட்டது.

சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்தாலும், முறையாக மாற்றி மீண்டும்விநியோகிப்பதில்லை. நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்தாலும் ஆக்சிஜன் விநியோகத்தை முறைப்படுத்தவில்லை. ஒரு வார சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் தொகை செலுத்தினோம். அதன்பின்னரும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து, பெருந்துறை அரசு ஐ.ஆர்.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம் என முடிவெடுத்தோம். அங்கு சென்றபோது படுக்கை இல்லாததால் மீண்டும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திரும்பினோம்.

நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலித்தவர்கள், ரூ.30 ஆயிரம் கேட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆக்சிஜன் விநியோகத்தில் நோயாளியின் உடல்நிலையை கணக்கில் கொள்ளாமல், தனியார் மருத்துவமனைகள் அலட்சியமாக இருக்கின்றன. அதேபோல, இறந்த பின்னரும் பாலித்தீன் பை, ஆம்புலன்ஸ், மயானத்தில் முன்கூட்டி எரிப்பதற்கு பணம் என பல்வேறுவகையிலும் பணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல, சில தனியார் மருத்துவ மனைகள் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா தொற்றாளர்களை சிகிச்சைக்கு சேர்த்தாலும், பல தனியார் மருத்துவமனைகள் உடனடியாக சேர்ப்பதில்லை. காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கேட்டாலே உரியதில் இல்லை. சில மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், நகராட்சி,மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டமுன்களப் பணியாளர்களை மருத்துவமனையில் சேர்க்க மறுப்பதாக மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிகிச்சையில் வேறுபாடு

மாவட்ட சுகாதாரப் பணி அலுவலர்கள் கூறும்போது, "தனியார் மருத்துவமனைகள் அதிக பணம் வசூல் செய்வது தொடர்பாக, ஆட்சியருக்கு மூன்று புகார்கள் சென்றுள்ளன. அவரது கையில் அந்த கோப்புகள் உள்ளன. முதல்வரின் காப்பீட்டுத்திட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதபடுக்கைகள் அளிக்க வேண்டும்.ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தக்கூடிய சூழல் என்பது மிகவும் சிரமமானவிஷயம்தான். தர வாரியாக தனியார்மருத்துவமனைகள் பிரிக்கப் பட்டுள்ளன. அதேபோல, தொற்றா ளருக்கு சிகிச்சை அளிக்கும் முறையிலும், கட்டணத்திலும் வேறுபாடுகள் உண்டு" என்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பாக்யலட்சுமி ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம்’ கூறும்போது, "தனியார்மருத்துவமனைகள் மீது புகார்கள்வருகின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை களுக்கு தெரியப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற முடியாதநிலையில், கடைசி நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். இதில் சிலர் உயிரிழந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் 3 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT