தமிழகம்

மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப பணியாளர் என கரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 136 படுக்கை வசதிகள் கொண்ட தாமத
மில்லா (ஜீரோ டிலே) வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக மருத்துவ வசதிகளுடன் மொத்தம் 1,914 படுக்கைகள் உள்ளன. திரவ ஆக்சி
ஜன் பயன்பாட்டை குறைத்து,அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை மேம்படுத்த ஆக்சிஜன் செறிவூட்டும் 416 கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மருத்துவ வசதிகள் கொண்ட 136 படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்
பட்டுள்ளன. ஆம்புலன்ஸில் வரும் கரோனா நோயாளிகள் ஒரு நிமிட தாமதம்கூட இல்லாமல் இந்த வார்டில் சேர்க்கப்படுகின்றனர். ஆக்சிஜன் படுக்கை காலியாகும் போது, நோயாளிகள், நோய் தகுதிக்கு ஏற்ப பேட்டரி கார் மூலம் வார்டுகளில் சேர்க்கப்படுகின்றனர்.

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் மூலம் 400 பேருக்கு பரவுகிறது. அதனால், கரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. கரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வந்தது. தற்போது தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு
இல்லாததால் மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இதுவரை 77 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 71 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தடுப்பூசி வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி திருப்பூரை அடுத்து திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்றுதடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. ஊரடங்கு காலத்திலும் பணியாற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பத்திரிகை, உணவு, கூரியர் விநியோகம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தின் ஆக்சிஜன் உற்பத்தி 400 டன். ஆனால், தேவை 470டன்னாக உள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் இருந்து ரயில்,கப்பல், விமானங்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், தயாநிதி மாறன் எம்.பி., சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண
பாபு, டீன் தேரணிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT