சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை சிங்கப்பூர் வாழ் மருத்துவ மாணவி வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதை அறிந்த சிங்கப்பூர் வாழ் மருத்துவ மாணவி ஹிரண்யா, சிங்கப்பூர், சீனா, இந்தியாவில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் தாயார் நாகு ஆகியோர் உதவியுடன் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கினார்.
அந்தக் கருவிகளை மாணவி ஹிரண்யா சார்பில் இன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் பொன்னம்பல அடிகளார், காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கினார். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் பகீரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கெனவே காரைக்குடி அரசு மருத்துவமனைக்குத் தமிழக மக்கள் மன்றம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்பினர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளனர்.