தமிழகம்

அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிவாரணப் பணி செய்தால் மக்கள் துயரை தீர்க்க முடியும்: இளங்கோவன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை செய்வதற்கு முன்வருவதன் மூலமாக மக்களின் துயரத்தை நிச்சயமாக தீர்க்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை, 32 நாட்களில் மழை பெய்த காரணத்தால் சென்னை மாநகரமே தண்ணீரில் மிதக்கிற கொடுமை நிகழ்ந்துள்ளது. சென்னை மாநகரில் ஏற்பட்ட பாதிப்புக்கு மழைநீர் மட்டும் காரணமல்ல. அதற்குமாறாக சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்குகிற செம்பரம்பாக்கம்,பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய ஏரிகளில் இருந்து எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென நவம்பர் 15 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 2 ஆம் தேதி ஆகிய நாள்களில் திறந்து விடப்பட்ட உபரிநீரினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் சென்னை மாநகரை தண்ணீரில் மிதக்க வைத்தது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 2 ஆம் தேதி மட்டும் ஒரு நொடிக்கு 29 ஆயிரம் கனஅடி நீர் முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதால் இன்றைக்கு மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய பேரிடர் நிகழ்ந்து 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிட்டவில்லை.

பேரிடர் நிகழ்ந்து 24 மணி நேரம் கழித்துதான் ராணுவம் வந்தது. அதன்பின் மீட்புப் பணியை தொடங்க ராணுவத்திற்கு 12 மணி நேரம் பிடித்தது. ஆக, பேரிடர் காரணமாக பாதிப்புக்கு உள்ளான மக்களை மீட்பதற்கு ராணுவத்திற்கு 48 மணி நேரம் பிடித்தது. எல்லாவற்றையும் இழந்த பிறகு செய்வது பேரிடர் மேலாண்மையாகக் கருத முடியாது. தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை முழு தோல்வி அடைந்ததையே கடந்த சில நாட்களாக சென்னை மாநகர மக்கள் அனுபவிக்கிற துன்பமே சாட்சியாக இருக்கிறது.

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் அடையாறு, நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவார மணல் அடைப்பை தமிழக அரசு தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீர் கடலுக்குள் செல்ல முடியாமல் சென்னை மாநகரை பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் 15 அடி உயரத்திற்கு மேல் நீர் பெருக்கெடுத்ததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் புகுந்து மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக தெருக்களில் நின்று கொண்டு உதவிக்காக ஏங்கி நின்ற கொடுமையை விட, வேறொரு கொடுமை இருக்கமுடியாது.

முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் செல்லவில்லை. தலைமை செயலகம் கடந்த டிசம்பர் 2, 3 ஆகிய நாட்களில் வெறிச்சோடியிருந்தது. சென்னை மாநகராட்சி செயல்படாத முடங்கிய நிலைக்கு சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எவருக்கும் கிடைக்கவில்லை. ஆறுகளில் சடலங்கள் மிதந்து கொண்டிருந்த கொடுமையை பார்க்க முடிந்தது. உலகத்தரம் வாய்ந்த மியாட் மருத்துவமனையில் மின்வெட்டு காரணமாக மாற்று ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் 18 பேர் பிராண வாயு இல்லாமல் இறந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

சில நாட்களுக்கு பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து மத்திய அரசு ரூபாய் 940 கோடி வழங்கியது. ஆனால், இந்த நிதி சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிக்காக வழங்கபடாமல், ஏற்கனவே, தரவேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூபாய் 388 கோடியும், 14 நிதிக்குழுவினால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ரூபாய் 552 கோடியும் வழங்கப்பட்டதே தவிர, வெள்ளநிவாரண நிதியாக ரூபாய் 940 கோடி வழங்கப்படவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் வேதனை அடைய செய்கிறது.

மத்திய பாஜக அரசின் இத்தகைய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலைப் போல வேறு எந்த அரசும் செய்யமுடியாது. எனவே, தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லையெனில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகிற நிலை ஏற்படும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு வரலாறு காணாத ஒன்றாகும். இதுவரை இத்தகைய கடுமையான பாதிப்பை தமிழக மக்கள் சந்தித்தது இல்லை. இந்த பாதிப்பிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கிற நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவினால் எடுக்க முடியுமா? என்கிற அச்சம் நமக்கு ஏற்படுகிறது.

கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு தான், தமது சொந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு காரிலேயே சென்று மண்ணில் கால்படாமல் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தார். தற்பொழுது, ஹெலிகாப்டர் மூலமாக, பாதிக்கப்பட்ட 45 லட்சம் சென்னை மாநகர மக்களை 45 நிமிடத்தில் பார்த்ததை விட கண்துடைப்பு நாடகம் வேறு எதுவும் இருக்கமுடியாது.

எனவே, வெள்ளநிவாரண நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முறையாக செய்யுமா என்கிற அச்சம் நமக்கு ஆழமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை முன்னின்று செய்வதற்கு முன்வருவதன் மூலமாக மக்களின் துயரத்தை நிச்சயமாக தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. மிக சோதனையான காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தலையாய பணியாக அனைவரும் கருதி செயல்பட வேண்டும்.

சென்னை மாநகரில் வாழ்கின்ற வட இந்தியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் செய்து வருகிற நிவாரண உதவிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. குறிப்பாக, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பள்ளிவாசலை திறந்து ஏழை, எளிய மக்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது நமக்கு மிகுந்த மன ஆறுதலைத் தருகிறது.

அதே போல, கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது தேவாலயங்களை நிவாரணப் பணிகளை செய்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே உதவி செய்கிற போக்கின் மூலமாக, இயற்கையின் சீற்றத்திலிருந்து மக்களை நிச்சயமாக காப்பாற்ற முடியும்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT