தமிழகம்

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும்; 4 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தென்மேற்குப் பருவமழை மேலும் தெற்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சிறிது தொலைவு முன்னேறியுள்ளது. அந்தமான் தீவுகளில் முழுமையாக முன்னேறியுள்ளது.

மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (மே.22) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 24ஆம் தேதி புயலாக வலுவடையும். அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிசா- வங்கதேசக் கரையை 26ஆம் தேதி கடக்கக்கூடும்.

வெப்பச் சலனம் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்’’.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT