முகக்கவசம் முழு பாதுகாப்பு கவசம், இங்கு வந்துள்ள செய்தியாளர்கள் சிலர் முகக்கவசத்தை மூக்குக்கு மேல் போடாமல் தாடைக்கு போட்டுள்ளீர்கள், முகக்கவசத்தை முழுமையாக போடுங்கள் என செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் முதன் முறையாக சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆய்வு மேற்கொள்ள பயணம் செய்தார். பதவியேற்ற 2 வாரங்களுக்குப்பின் முதன் முறையாக செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார். செய்தியாளர்களை தனி அரங்கில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு மேடையில் தனித்தனியாக நின்று சந்தித்தார்.
அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியம் ஆகியோரும் உடனிருந்தனர், மிகுந்த பாதுகாப்புடன் நடந்த இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது முதல்வர் செய்தியாளர் சந்திப்பிலும் முகக்கவசத்தை ஒழுங்காக போடாத செய்தியாளர்கள் இருந்ததை ஸ்டாலின் பேட்டியின் போது கவனித்தார்.
கூட்டமுடிவில் அவர் செய்தியாளர்களிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார், “செய்தியாளர்கள் இவ்வளவு பிரச்சினைக்கு பிறகும் தாடைக்குத்தான் முகக்கவசம் அணிந்துள்ளீர்கள் தயவு செய்து மூக்கை முழுமையாக மூடும்படி முகக்கவசம் அணியுங்கள் செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து உங்களையும் காத்து, மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”. என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன் முகக்கவசத்தை எவ்வாறு அணியவேண்டும், எவ்வாறு அணியக்கூடாது என காணொலி மூலம் முதல்வர் செய்முறை விளக்கம் காட்டி அனைவரும் முகக்கவசம் அணியவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.