தமிழகத்தில் ஊரடங்கை தீவிரமாகநடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக பொதுமக்கள் அச்ச உணர்வுடன் வாழும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதைகட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு இன்னும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. தொற்றைகட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.
தமிழகத்தில் தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் தடையின்றிகிடைக்கவும், ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி அதிக அளவில் கொள்முதல் செய்யவும் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல கருப்பு பூஞ்சைநோயால் இதுவரை 9 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் கூறியுள்ளார். அதேநேரம் மதுரையில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாகதமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், இதை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்குரிய மருந்து உடனடியாக கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.