புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர் உட்பட 20 பேருக்கு ‘கருப்பு பூஞ்சை’ நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சராசரியாக நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் புதுவையிலும் ‘கருப்பு பூஞ்சை’நோயின் தாக்கம் தொடங்கிஉள்ளது.
இதுபற்றி துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் கேட்டபோது, "தற்போது ‘கருப்பு பூஞ்சை’வேகமாக பரவுகிற நிலையில்குறிப்பிடத்தக்க நோயாக இதைஅறிவிக்க கோப்பு தயாராகிறது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு கண்டறியப்பட்டாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தற்போது வரை புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர்உட்பட 20 நோயாளிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கரோனா தொற்று ஏற்பட்டால்சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவரை அணுகுங்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து ‘கருப்பு பூஞ்சை’ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவதாக தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷிடம் கேட்டபோது, "கரோனா வந்தவர்கள், நோயில் இருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் ‘கருப்பு பூஞ்சை’ நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுவரை இங்கு 14 நோயாளிகள் வந்துள்ளனர். அவர்களில் நோயின் தாக்கம் அதிகரித்து, சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.
கருப்பு பூஞ்சை நோய் மூக்கின்வழியே, கண்ணில் பரவி ரத்தக் குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவானோர், தீவிர சர்க்கரை நோய்இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது. அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவதால் அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது.
இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்வது கஷ்டம். கண்ணைச் சுற்றிலும் வீக்கம், வாய், மூக்கில்ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து கரோனா நோயாளிகளுக்கும் ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுவராது. சர்க்கரை நோய் தீவிர நிலையில் உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்" என்றார்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கோலியனூரைச் சேர்ந்த 52 வயது நபர், திண்டிவனத்தைச் சேர்ந்த 65 வயது நபர் ஆகிய 3 பேர் ‘கருப்பு பூஞ்சை’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.