சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் உடல்நிலை குறித்து டிஜிட்டல் திரை மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி மற்றும் சிகிச்சை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்து கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்ற அரசின் முடிவை ட்விட்டர் மூலம் ஜக்கி வாசுதேவ் போன்ற மாற்று கருத்து உடையவர்களும் வரவேற்றுள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களில் அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் எதிரிகளும் பாராட்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
இந்த மருத்துவமனையில் ஒரு வாரத்துக்குள் கூடுதலாக ஆக்சிஜன் வசதி கொண்ட 172 படுக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலையை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை பார்க்க உறவினர்கள் வருவதைத் தவிர்க்கும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் திரை மூலம் நோயாளிகளின் உடல்நிலை குறித்து தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.