தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் வே.துரை (40). சுமைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் வலது கால் செயல்படாமல் போனது. இதனால் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அரசு சார்பில் இவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்த சைக்கிள் உதவியோடு தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கம்பங்கூழ், சர்பத் வியாபரம் செய்து வந்தார். இந்நிலையில் கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர் சாலையோரம் வியாபாரம் செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். வருமானத்துக்கு வழியின்றி தவித்த அவருக்கு, முகக்கவசம் வியாபாரம் கைகொடுத்தது. நண்பர் ஒருவரிடம் ரூ.1,000 கடன் வாங்கி, அந்த பணத்தில் முகக்கவசங்களை வாங்கி தனது மூன்று சக்கர சைக்கிளில் வைத்தே வியாபாரம் செய்யத் தொடங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 19 மற்றும் 18 வயதில் 2 பெண் குழந்தைகள் என்னோடு இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கூலி வேலைக்கு செல்கின்றனர். அந்த வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். கடந்த 2 மாதங்களாக கம்பங்கூழ், சர்பத் வியாபாரத்தில் ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. ஊரட ங்கு காரணமாக அந்த கடையை நடத்த காவல் துறையினர் அனுமதிக்க வில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முகக்கவசங்களை விற்பனை செய்து வருகிறேன்” என்றார் அவர்.