தமிழகம்

சென்னை, புறநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஈ, கொசு ஒழிப்பு பணிகள் தொடக்கம்: பூச்சியியல் நிபுணர்கள் கொண்ட 18 குழு வருகை

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் புறநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஈ, கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணிகளை சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள பூச்சியியல் நிபுணர்கள் கொண்ட 18 குழுக்கள் இப்பணியில் ஈடுபடுகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் ஈ, கொசுக்களை அழிக்க புகை மருந்து அடிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இதற்கான நிகழ்ச்சி சென்னை ஓமந்தூராரர் வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. 18 பூச்சியியல் நிபுணர்கள் தலைமையில் இப்பணிகளில் ஈடுபட உள்ள குழுவினரை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார். புகை மருந்து தெளிக்கும் இயந்திரங்களையும் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னை மற்றும் புறநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க பல்வேறு மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாம்கள் மூலம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், நீரினால் பரவும் வயிற்றுப்போக்கு நோய்களை தடுக்க ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. தினமும் ஆட்டோக்கள் மூலம் வீடு வீடாக சென்று பிளிச்சீங் பவுடர், குளோரின் மாத்திரைகள், பொது சுகாதார ஆலோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, கொசு உற்பத்தியாவதை தடுக்க கொசுப்புழு ஒழிப்பு மற்றும் ஈ, கொசுக்களை அழிக்க புகை மருந்து அடிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மழை வெள்ள பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து மண்டல மற்றும் மாவட்ட பூச்சியியல் நிபுணர்கள் அடங்கிய 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் தனித்தனியாக பிரிந்து வீடு வீடாக சென்று கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய தேங்காய் சிரட்டைகள், திறந்துகிடக்கும் ஆட்டுக்கல், டயர் மற்றும் தண்ணீர் தேங்குகிற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி கொசு மருந்து புகை அடிப்பார்கள்.

மருந்துத் தெளிப்பு

வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப் புழு உருவா வதை தடுக்க டெமிபாஸ் மருந்து தெளிப்பார்கள். சுற்றுபுறங்களில் ஈக்கள் பரவாமல் தடுக்கவும் மருந்து தெளிப்பார்கள். கொசு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் மேற்கொள்வார்கள்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகா தாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் கே.குழந்தைசாமி, தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைமை இயக்குநர் சவும்யா சாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT