லட்சுமி நாராயணன். 
தமிழகம்

புதுவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனை நியமித்த ஆளுநர்: விரைவில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

செ. ஞானபிரகாஷ்

முதல்வர் கோப்பு அனுப்பி 12 நாட்களுக்குப் பிறகு தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று நியமித்துள்ளார். இதனால் விரைவில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராகக் கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 9ஆம் தேதி தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். சீனியர் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

அதே 9ஆம் தேதியன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சை முடிந்து கடந்த 17ஆம் தேதி புதுச்சேரி திரும்பினார். தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காமல் நிலுவையில் இருந்ததால் சட்டப் பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியவில்லை. இதனால் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். அமைச்சர்கள் பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாததும் காரணம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று பிற்பகலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெலங்கானாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதையடுத்து இன்று இரவு சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்வரின் பரிந்துரையின் பேரில் எம்எல்ஏ லட்சுமி நாராயணனைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை நியமித்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக சபாநாயகர் நியமனக் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் கிடைத்துள்ளதால் விரைவில் சட்டப்பேரவையில் முதல்வர், எம்எல்ஏக்கள் பதவி ஏற்பும், பிறகு பேரவைத் தலைவர் தேர்வும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் எம்.பி.யானார். இதையடுத்து சபாநாயகர் பதவியை லட்சுமி நாராயணன் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு தரப்படாததால் அதிருப்தி அவருக்கு ஏற்பட்டது. அப்பொறுப்பில் வேறு ஒருவர் நியமனத்தால் பின்னர் ஆட்சியின் நிலையும் மாறியது. அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். கடந்த ஆட்சியில் அவர் விரும்பிய பதவியே இம்முறை லட்சுமி நாராயணனுக்குத் தேடி வந்துள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.

SCROLL FOR NEXT