மஹாபாரதம் குறித்து அவதூறு பரப்பியதாக கமல்ஹாசனுக்கு எதிராக வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், மஹாபாரதத்தையும், இந்துக்களின் கலச்சாரத்தையும் இழிவுபடுத்தி பேசியதாகவும், இதனால் கமல்ஹாசன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டு நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம், வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவும் கோரிகமல்ஹாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை கமல்ஹாசன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இல்லை. எனவே, வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.