கரோனா தொற்றை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவுக்கு 4 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 19.05.2021 அன்று கரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா பெருந்தொற்றின் வேகமானது, கடந்த முதல் அலையைவிட இந்த இரண்டாவது அலையில் மிக கடுமையாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது என்றும், இப்பெருநோயினை அரசின் செயல்பாடுகள் மட்டுமே முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் களத்தில் நின்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் வழங்குவது, கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச வாகன வசதிகள் செய்வது, இந்நோய் தீவிரம் குறித்தும், தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற சேவைகளில், தன்னலம் கருதாப் பெரும் சேவைகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் கைகோத்து நன்கு ஒன்றிணைந்து மக்களின் சேவைகளை முன்னுரிமைப்படுத்தி இணைந்து செயல்பட்டால், இந்த நெருக்கடி காலத்தை எளிதில் வெற்றி கொண்டு மக்களைக் காக்கலாம் என்றும் முதல்வர் கூறினார்.
எனவே, இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு உதவிட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது, கரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவுக்குக் கீழ்க்கண்ட அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இக்குழு தன்னலம் கருதா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த கரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க மேற்கொள்ளும் பணிகளுடன் சேர்த்து, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து சமூகப் பங்களிப்பு நிதியினைப் பெற்று, அதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.
மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் தனது பணிகளை மேற்கொள்ளும். தனியார் தொண்டு நிறுவனங்கள் tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மாநில ஒருங்கிணைப்புக் குழுவினைத் தொடர்புகொள்ளலாம்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.