தமிழகம்

ஜிப்மரை கோவிட் கேர் மையமாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி பாஜக கடிதம்

அ.முன்னடியான்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை பிரத்யேக கோவிட் கேர் மருத்துவமனையாக மாற்றக் கோரி மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரியில் கரோனா தொற்று ஒவ்வொரு நாளும் சுமார் 2,000 பேருக்குப் பரவுகிறது. சுமார் 30 முதல் 35 பேர் தினமும் உயிரிழக்கின்றனர். அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து வரும் பல நோயாளிகள், தொற்றினால் இறந்து கொண்டுள்ளனர். ஆனால், அதை புதுச்சேரியின் கணக்குடன் சேர்க்கவில்லை.

புதுச்சேரியில் தற்போது 18,277 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவற்றில் 2,107 பேர் மருத்துவமனைகளிலும், 16,170 பேர் வீட்டில் தனிமையிலும் உள்ளனர். தற்போதைய நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் - 519 இந்திரா காந்தி மருத்துவமனையில் - 440, அனைத்து கரோனா பராமரிப்பு மையங்களிலும் - 701 படுக்கைகள் எனப் புதுச்சேரியில் மொத்தமுள்ள 1,600 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

புதிய தொற்று நோயாளிகள் பெருகி வரும் விகிதத்தை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் மேலும் படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வருகிறார்கள்.

எனவே, ஜிப்மரில் 500 படுக்கைகள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு நோயாளிகளுக்குப் போதுமானதாக இல்லை. புதுச்சேரியின் தற்போதைய கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜிப்மரை கரோனா சிறப்பு பராமரிப்பு மருத்துவமனையாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.’’

இவ்வாறு சாமிநாதன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT