புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள ஊர்களில் உள்ள அரசு கட்டிடங்களில் கரோனா தொற்றாளர்களுக்குத் தனியாகவும், மற்ற நோயாளிகளுக்குத் தனியாகவும் தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கியில் இன்று (மே.21) நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
’’காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்படுவோர் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யாமல் தனியார் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
கரோனா தொற்றுடன் இவ்வாறு செய்வோர் நாளடைவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்குப் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். அந்த வகையில் இந்தக் கிராமத்தில் இருந்துகூட 2 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவது கடினம். எனவே, இதுபோன்ற அபாயகரமான கட்டத்தைத் தவிர்ப்பதற்காகவே ஆங்காங்கே அரசு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனாவைத் தடுப்பதற்காக நம்மிடம் பேராயுதமாக இருப்பது தடுப்பூசிதான். இதை, அச்சமின்றி மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும். தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்.
புதுக்கோட்டையில் படுக்கை வசதிகள் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள ஊரில் கரோனா தொற்றாளர்களுக்குத் தனியாகவும், மற்ற நோயாளிகளுக்குத் தனியாகவும் சிகிச்சை அளிப்பதற்கு அரசு கட்டிடங்களில் படுக்கை வசதிகளுடன் தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இங்கு தங்க வைக்கப்படுவோருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும். அதில், மேல் சிகிச்சை தேவைப்படுவோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். இதேபோன்று, மற்ற இடங்களிலும் படிப்படியாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த்மோகன், சுகாதார துணை இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று, கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.