ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்திய ஆட்டோக்களைக் கொண்டு கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் சேவையில் தங்களை 24 மணி நேரமும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர், வடசென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ’கடமை’ அறக்கட்டளை இளைஞர்கள்.
கடமை அறக்கட்டளையின் மூலம் இந்தப் பணிகளை முழுக்க முழுக்க இலவசமாகச் செய்துவரும் வசந்தகுமார், சத்யராஜ் ஆகியோரில் வசந்தகுமார் நம்மிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்திய ஆட்டோக்களின் சேவையைக் குறித்து விரிவாகப் பேசினார்.
“வடசென்னை பகுதியில் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பார வண்டி இழுப்பவர்கள், பட்டறைகளில் வேலை செய்பவர்கள் என விளிம்புநிலை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆகவே, வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவர்களின் குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாமல் இடையிலேயே நிறுத்திவிடும் பிரச்சினை அதிகமாக உள்ளது.
அப்படி இடைநிற்றலால் அவதிப்படும் குழந்தைகளை, அவர்களின் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து, தொடர்ந்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு உதவுவது, குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் தடையில்லாமல் கிடைக்கச் செய்வது ஆகியவற்றுக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக ’கடமை’ என்னும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினோம்.
இதன் மூலம் ரத்த தான முகாம்களை ஏற்படுத்தி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகள் ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு அளித்துள்ளோம். இதுதவிர பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகள் நடக்கும்போதும் கரோனா முதல் அலையின்போதும் ஏழை மக்களுக்கு உணவளிப்பது, மருத்துவ உதவிகள் போன்றவற்றைச் செய்தோம்.
தற்போது கரோனா இரண்டாவது அலை தொடங்கியபோது, தொடக்கத்தில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் சேவையைத்தான் செய்தோம். அதன்பின் நிலைமை மோசமாகி, ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் இறக்கும் நிலை வந்ததை அடுத்து, எங்களின் ஆட்டோவிலேயே ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தும் பிரத்யேகமான சில ஏற்பாடுகளைச் செய்து, இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு ஆட்டோவில் 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தினோம்.
இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய நான்கு ஆட்டோக்கள் மூலம் மூச்சு விடுவதற்கு சிரமப்படும் 200க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியிருக்கிறோம். இன்னும் ஒரு டெம்போ டிராவலர், இரண்டு கார்களில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பணியில் எங்களுடன் சேர்த்து 30 பேர் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மருத்துவர், செவிலியர் போன்றவர்களும் உள்ளனர். மாஸ்க், முழுக் கவச உடை ஆகியவற்றை அணிந்துதான் களத்தில் போராடி வருகிறோம். எங்களிடம் உதவி கேட்டு வரும் அழைப்புகள் நிற்கும்வரை இந்தப் பணியைத் தொடர்ந்து செய்வோம்” என்று வசந்தகுமார் தெரிவித்தார்.