விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கருப்பு பூஞ்சை நோய் (மியூகோர் மைகோசிஸ்) என்ற தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கோலியனூரைச் சேர்ந்த 52 வயது நபர், திண்டிவனத்தைச் சேர்ந்த 65 வயது நபர் ஆகிய 3 பேர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் விழுப்புரம் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் இன்று (மே 21) கூறுகையில், "ஆங்கிலத்தில் 'மியூகோர் மைகோசிஸ்' (Mucormycosis) என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை மிகவும் அரிதான, அதே நேரத்தில் மிகவும் கொடிய நோயாகும்.
இந்த பூஞ்சை நோய் அனைவரையும் தாக்காது என்பதால் அச்சம் தேவையில்லை. நோய் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்ட் மருந்துகள், நமது உடலில் இயல்பாக உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனைத் தற்காலிகமாகக் குறைப்பதால், அதைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றி காற்றிலும், அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் வாழும் கருப்பு பூஞ்சைகள் கண்கள், வாய் வழியாக நமது ரத்தத்தில் கலந்து நோயை உருவாக்குகின்றன.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோயும் ஒரே நேரத்தில் தாக்கி, பார்வையைப் பறித்துள்ளது.
சென்னையில் 12 வயதுச் சிறுமி இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோயின் பாதிப்புகள் தென்படத் தொடங்கியுள்ளன.
கருப்பு பூஞ்சை கொடிய நோய் என்பதில் ஐயமில்லை. அதே நேரம் அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றக்கூடிய நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல. கண் பார்வையைப் பறிப்பது மட்டுமின்றி, மூளைக்கும் வேகமாகப் பரவி உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்படாதவர்களும் கூட, சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கண்களில் வீக்கம், வலி, கண்கள் சிவத்தல், பார்வைத் திறன் குறைதல், முகத்தில் வீக்கம், மூக்கிலிருந்து குருதி கலந்த திரவம் வடிதல் ஆகியவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் ஆகும்.
இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீள முடியும். இந்நோய்க்கு பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இல்லை.
சென்னையில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நோயை குணப்படுத்துவதற்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) எனப்படும் ஊசி மருந்துக்கு கடுமையாகத் தட்டுப்பாடு உள்ளது" என்றனர்.