பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

எதிர்வரும் கரோனா அலைகள்; இடைக்கால கோவிட் கேர் சென்டர் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுக: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

எதிர்வரும் கரோனா அலைகளைத் தடுக்க பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை கவனம் செலுத்த வேண்டும், மாற்று வழியில் ஐசிசிசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.அகிலன் இன்று (மே 21) பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநருக்கு எழுதிய கடிதம்:

"பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பாக, தமிழகம் முழுவதும் அனைத்து சுகாதார மாவட்டத்திலும் வட்டாரத்தில் ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐசிசிசி (Interim covid care centre) எனும் இடைக்கால கோவிட் கேர் சென்டரை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி வழிகாட்டுதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பொது சுகாதாரத் துறை சார்பில் அறிகுறி இல்லாதவர்கள் சிறிதளவு அறிகுறி உள்ளவர்களில் பிராணவாயு (O2) தேவைப்படாதவர்களுக்கு கரோனா சிகிச்சை மையம் (CCC) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல சுகாதார மாவட்டங்களில் முழுமையாக நிரம்பாமல் சில படுக்கைகள் காலியாக உள்ளன.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் பிரதான பணியான நோய்த் தடுப்புப் பணிகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், தொற்றா நோய் பாதிக்கும் வகையில் ஐசிசிசி வழிகாட்டும் கடிதம் உள்ளது. தடுப்புப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அனைத்துத் துறைகளையும் சிகிச்சைக்காகப் பயன்படுத்துவது நோய்ப் பரவலின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இடையூறாக மாற வாய்ப்புள்ளது.

1. தாய் சேய் நலப் பணிகளில் இந்தியாவிலே தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதற்கு முதுகெலும்பாக விளங்குவது, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள். ஐசிசிசியாக மாற்றினால் தாய் சேய் நலப் பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு, இந்திய அளவில் தமிழகம் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

2. ஐசிசிசியாக மாற்றி சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்தினால் கரோனா தடுப்புப் பணிகள் (Sample collection, Vaccination,Contact survey, containment zone, Check post duty,fever camp) கடுமையாக பாதித்து நோய்ப் பரவலை அதிகரிக்கும்.

3. பெரும்பாலான தாலுகா மாவட்ட அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளில் மிதமான மற்றும் தீவிர கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அனைத்து வயதுப் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பெரும்பாலான புற நோயாளிகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.

4. இன்றைய தினம் முதல் 18-44 வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் வரும் நாட்களில் கூடுதல் தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டிய தேவைகள் இருக்கும்..

5. பொது சுகாதாரத் துறையில் தற்போது செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையங்களில் (CCC) தேவைக்கேற்ப படுக்கைகளை பிராண வாயு (O2 bed) படுக்கையாக மாற்றினாலே போதுமானது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ந்து முழுமையாக கரோனா தடுப்பு மற்றும் தாய் சேய் நலனில் ஈடுபடுத்தினால் தொற்றின் எண்ணிக்கை குறைந்து, இதர சேவைகள் தொய்வின்றி மக்களுக்குச் சென்றடைய உதவும்.

6. சென்னை மாநகரில் கல்லூரிகள் மற்றும் இதர கட்டிடங்களில் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்படுவது போல், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகள் மற்றும் இதர கட்டிடங்களில் கூடுதல் CCC, MCH, CCC, (Both with and without O2) புதிய மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

7. வருங்காலங்களில் மூன்றாம் அலை வரக்கூடும், பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. தற்போதைய நிலையில் மிகக்குறைந்த அளவிலே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் அலைகளைத் தடுக்க பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை தடுப்பூசி பணிகள் மற்றும் நோய் தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்..

8. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தாலுகா மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகள் 100% உபயோகத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

9. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் அனைவரையும் சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தி அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், தடுப்பூசி பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளில் பின்னடைவு ஏற்படும். இன்றளவில் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் அனைத்து கரோனா சிகிச்சை மையம் (CCC) சில மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சைப் பணி மேற்கொண்டுள்ளனர். அதை விடுத்து, அனைத்து பொது சுகாதாரத் துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சிகிச்சைப் பிரிவில் ஈடுபடுத்தினால், தற்காப்பு மற்றும் தடுப்பூசி பணிகள் பாதிப்படையும்.

ஆகவே, பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களை உணர்ந்தும், எதார்த்த கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டும் மாற்று வழியில் ஐசிசிசி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கிறோம்".

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT