தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுவதை முன்னிட்டு ஆலை வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 15 டன் வரை ஆக்சிஜன் விநியோகம்: உற்பத்தி அளவை அதிகரிக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சீரமைக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டது. கடந்த 12-ம்தேதி இரவு உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மறுநாள் ஆக்சிஜனை குளிர்விக்கும் கொள்கலன் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஸ்டெர்லைட் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு இஸ்ரோவல்லுநர் குழுவினரும் ஆலோசனைகளை வழங்கினர்.

ஒரு வார முயற்சிக்கு பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. மீண்டும் உற்பத்தி செய்யப்பட்ட 6.34 டன் திரவஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று முன்தினம்இரவு 11.30 மணிக்கு மற்றொருடேங்கர் லாரியில் 5.24 டன் திரவஆக்சிஜன், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை 7.7 டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் ஆக்சிஜன் சப்ளை நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மற்றொரு டேங்கர் லாரியில் 5.24 டன் திரவ ஆக்சிஜன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தினமும் 10 முதல் 15 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 2 டேங்கர் லாரிகளில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த அளவை படிப்படியாக அதிகரித்து, இரு நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனான தலா 35 டன் என்ற அளவை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில தினங்களில் முழு உற்பத்தி திறன் எட்டப்படும் எனஅரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT