பழங்குடியினரின் இருப்பிடங் களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக, நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியாசாஹூ தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு, ஏழுமறம் ஆகிய பழங்குடியின கிராமங்களில், கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
கரோனா 2-வது அலையின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தினமும் 300 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில், 200 பேர் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. அதில், 20 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. போதிய அளவில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் உள்ள நிலையில், மக்கள் சிரமமான நிலையை எட்டக்கூடாது என்பதற்காக தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவரை, மாவட்டத்தில் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதல் அலையில் பழங்குடியின மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், தற்போது பழங்குடியின மக்களையும் அதிகமாக பாதித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் கரோனா நோய் தொற்று ஏற்படுகிறது. ஆனால், அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனவே, பழங்குடியின கிராமத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, முடிந்தவரை கிராமங்களில் குழுவாக விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ கூறும்போது, "கடந்த ஒரு வாரமாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறோம். முன்னுரிமை அடிப்படையில் பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதுவரை 1,600-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முறையாக முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, கூட்டமாக கூடுவதை தவிர்த்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவை குறித்து மாவட்ட நிர்வாகம்,மருத்துவத் துறை என அனைவரும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்துவதில் பழங்குடியின மக்கள் தயக்கம் காட்டினர். அதனை போக்கும் வகையில், அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பழங்குடியினர் பகுதிகளில்தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், வன அலுவலர் கொம்மு ஓம்காரம், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.