பங்காரு அடிகளார். 
தமிழகம்

பாரம்பரிய உணவு முறையை பின்பற்ற வேண்டும்: கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பங்காரு அடிகளார் அறிவுரை

செய்திப்பிரிவு

கரோனா 3-வது அலையில் இருந்துமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

கரோனா வைரஸின் 2-வது அலை உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தினசரி3 லட்சத்துக்கும் அதிகமானவர்களும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனிடையை 3-வது அலை வருவதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, வரகு, சாமை ஆகிய சிறு தானியங்களை கஞ்சியாகவும், கூழாகவும் குடிக்க வேண்டும். கைகுத்தல் அரிசியை சாதமாக வடித்து, அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள்காலையில் சாப்பிட வேண்டும்.

குடி தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பானையில் ஊற்றி குடிக்க வேண்டும். இளநீர் பருக வேண்டும். உணவு உண்ட பின் ஒரு வெற்றிலை, சிறிதளவு பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடவும். சுண்ணாம்பில் கால்சியம் இருக்கிறது. இயற்கை முறையில் தயார் செய்த அச்சு வெல்லத்தை சாப்பிடலாம்.

சீரானா பிராண வாயுவுக்கு நொச்சி இலை, நுணா இலை, தைலஇலை ஆகியவற்றுடன் வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து ஆவிபிடிக்க வேண்டும். செடி, மரங்கள்உள்ள பகுதியில் 10 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் நல்ல தூக்கம் அவசியம். ஏ.சி, மின்விசிறி முதலியவற்றை தவிர்க்கவும். சாக்லெட், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள பொருட்களை உண்ணக் கூடாது. சமையலுக்கு பழைய எண்ணெய், கலப்படஎண்ணெயை உபயோகப்படுத்தக் கூடாது. மசாலா மற்றும் அதிக தாளிப்பு உள்ள பொருட்களை சாப்பிடக் கூடாது. பகல் எது, இரவு எது என்று உணர்ந்து வாழ வேண்டும். இரவு முழுவதும் செல்போனில் பேசுவது, தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்பது உடல் நலனை பாதிக்கும். இந்த கரோனாவில் இருந்து காப்பாற்ற உடற் பயிற்சி செய்வது, இடைவெளி விட்டு இருப்பது முக்கியம்.

நான் கூறியவற்றை குடும்பத்தினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT