கொல்கத்தாவில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல், அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியில் தகனம் செய்யப்பட்டது.
கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் முத்துக்குமார் (33). இவர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே பனகார்க் 18-வது இன்ஜினியர்ஸ் ரெஜிமெண்டில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்தார். 13 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது ஊருக்கு வந்துவிட்டு சென்றுள்ளார்.
கடந்த 17-ம் தேதி பணியில் இருந்த முத்துக்குமாருக்கு திடீரென மாரப்படைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துக்குமார் உடல் விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே நக்கல முத்தன்பட்டி கிராமத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. உடலை பார்த்து முத்துகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கிராம மக்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து உடல் அங்குள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெங்களூர் 18-வது இன்ஜினியர்ஸ் ரெஜிமென்ட் பிரிவு கேப்டன் முருகன் தலைமையில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இளையரசனேந்தல் குறு வட்ட வருவாய் அலுவலர் வீரலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் போத்திராஜ், திருவேங்கடராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முத்துக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.