கரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், கரோனா அச்சத்தையும் மீறி கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடி திருச்சி மாநகருக்கு வருவது தொடர்கிறது.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 5,000-க்கும் அதிகமான கட்டுமானத் தொழிலாளர்கள் திருச்சி மாநகருக்கு வருவது வழக்கம். ஜங்ஷன் மேம்பாலம் அருகேயுள்ள விராலிமலை சந்திப்பு, சத்திரம் பேருந்து நிலையம், வயலூர் சாலை கீதாநகர், திருவெறும்பூர், ரங்கம் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் இவர்களை, கட்டுமானப் பணி மேற்பார்வையாளர்கள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களுக்கு தேவைக்கேற்ப பிரித்து அனுப்புவார்கள்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில், தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக, கரோனா அச்சத்தையும் மீறி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சி மாநகருக்கு தொழிலாளர்கள் வருவது தொடர்கிறது.
ஜங்ஷன் மேம்பாலம் அருகேயுள்ள விராலிமலை சந்திப்புக்கு வழக்கமாக 1,000-க்கும் அதிகமானோர் வேலை தேடி வருவார்கள். இதில், பெண்களே அதிகளவில் இருப்பர்.
ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள போது, பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையிலும் பலர் வேலை தேடி வருகின்றனர். இவர்கள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும், லிப்ட் கேட்டும் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
இதுதொடர்பாக விராலிமலை அருகேயுள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த க.சுப்புலட்சுமி கூறியது:
கணவரால் வேலைக்கு போக முடியாத நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை. ஊரிலும் 100 நாள் வேலையோ, விவசாய வேலையோ கிடைக்கவில்லை. இவ்வளவு தூரம் வந்தும் வேலை கிடைக்காவிட்டால் நஷ்டம்தான். வேலைக்கு வரும்போதும், வீடு திரும்பும்போதும் வழியில் இருசக்கர வாகனத்தில் வரும் யாரிடமாவது லிப்ட் கேட்டு செல்வேன். இடையில் நடந்தும் செல்வேன். போக்குவரத்து வசதி இல்லாததால்தான், ஊரில் உள்ள பலரால் வேலைக்கு வர முடியவில்லை என்றார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ச.செல்வி கூறும்போது, ‘‘தினமும் லிப்ட் கேட்டுத்தான் வருகிறேன். ஊரில் வேலை கிடைக்காததால், கரோனா காலத்திலும் இவ்வளவு தொலைவு வேலை தேடி வருகிறோம். நாங்கள் வேலைக்கு வந்து, ஊர் திரும்ப அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
கரோனா பரவல் தீவிரமாக உள்ளதாலேயே ஊரடங்கை அரசு அமல்படுத்தியதுடன், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முதல் தவணையாக ரூ.2,000 நிவாரண நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச்சூழலில் வெகு தொலைவில் இருந்து கட்டுமான வேலைக்காக வந்து செல்லும் தொழிலாளர்களுக்கு கரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் குடும்பமே பாதிக்கப்படும். எனவே, இந்தச்சூழலில் தேவையின்றி வெளியேவராமல், அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுதான் சரியாக இருக்கும் என்றனர்.