கரோனா பரவல் தொடர்ந்து புதுச்சேரியில் அதிகரிக்கும் சூழல் நீடித்தால், பகல் 12 மணியில் இருந்து காலை 10 மணியாக மாற்றி ஊரடங்கு நேரத்தை அதிகரிக்க ஆளுநர் தமிழிசை தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனாவால் இறந்தோர் விவரங்களைத் தணிக்கை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
கரோனா தொற்று மேலாண்மைக் கூட்டம் ராஜ்நிவாஸில் இன்று மாலை நடந்தது. ஆளுநர் தமிழிசை தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்:
''அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் புதுச்சேரியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பகல் 12 மணியில் இருந்து காலை 10 மணி ஆக மாற்றி ஊரடங்கு நேரத்தை அதிகரிக்கப் பரீசிலிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பது, கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
புதுச்சேரியில் இதுவரை எத்தனை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கண்டறிய வேண்டும். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. எனினும் நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், தைராய்டு மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொண்டவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு 50 ஊசிகள் வரை போடப்படும். ஆனால், அந்த மருந்து கிடைப்பதில்லை. விலையும் அதிகம். எனினும் தேவையான சிகிச்சை தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மைக்ரோ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே நடமாடுவது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை விவரங்களை முறையாகத் தணிக்கை செய்ய ஆலோசிக்கப்பட்டது. இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது''.
இவ்வாறு ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.