பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்வதில் பிரச்சினையா? - திருப்பத்தூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர்களை அணுகலாம்

ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டு செல்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், தோட்டக் கலைத்துறையைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குநரகம் இன்று (மே 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"கரோனா பெருந்தொற்று காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகளை மார்க்கெட் பகுதிக்குக் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டால், விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தோட்டக்கலை காய்கறி மற்றும் பழ வகைகளைச் சந்தைக்குக் கொண்டு செல்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது மழை காரணமாக காய்கறி பயிர்கள் சேதமானாலோ சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தெரிவித்து அதற்கான உதவியைப் பெறலாம்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் காய்கறி, பழங்களை அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, சனிக்கிழமை அல்லது திங்கள் கிழமைகளில் அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டு செல்லலாம்.

ஊரடங்கு காரணமாக நேரில் செல்வதைத் தவிர்த்து தொலைபேசி வாயிலாக உதவி இயக்குநரிடம் ஆலோசனை பெற்று உதவி பெறத் தோட்டக் கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 88385-17900, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 90434-93204, மாதனூர் விவசாயிகள் 96551-93927, கந்திலி விவசாயிகள் 94431-43445, திருப்பத்தூர் விவசாயிகள் 73391-65526 ஆகிய தொலைபேசி எண்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர்களைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT