காரைக்கால் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் இன்று (மே 20) கூறியதாவது:
”காரைக்கால் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று மிக அதிக அளவில் பரவி வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினரின் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி காரைக்காலில் ஒரே ஒரு மையத்தில், பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இணைய வழியில் முன்பதிவு செய்யும்போது, நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அனுமதி கிடைக்கிறது.
தற்போதைய நோய்த் தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, மக்களைப் பாதுகாக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் 13 மையங்களிலோ அல்லது மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு ஒன்று என்ற அளவிலோ மையங்களை அமைத்துத் தடுப்பூசி போட வேண்டும்.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.