திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டி மே 24-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் வெங்காய மண்டி இயங்கி வருகிறது. இங்கு 78 மண்டிகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் 250 டன் முதல் 300 டன் வரை பெரிய வெங்காயமும், 150 டன் சின்ன வெங்காயமும் இங்கு வரப் பெறுகிறது. திருச்சி உட்பட 6 மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் வெங்காயம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, இந்த வெங்காய மண்டியில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 10 பேருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் கரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சில நாட்களுக்கு மார்க்கெட்டை மூடலாம் என்று வியாபாரிகளும், தொழிலாளர்களும் கடந்த ஒரு வாரமாக ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வெங்காய மண்டியில் தற்காலிகமாக விற்பனையை நிறுத்துவது குறித்து வியாபாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகத் திருச்சி வெங்காயத் தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜ், ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ’’வெங்காய மண்டியில் இன்னும் 2 நாட்களுக்கு விற்பனை இருக்கும். வியாபாரிகளும், தொழிலாளர்களும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் தேவையான வெங்காயத்தை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள முடியும்.
முழு ஊரடங்கு நாளைத் தொடர்ந்து மே 24-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை வெங்காய மண்டி இயங்காது. விவசாயிகள் வெங்காயத்தைத் தேவையின்றி அறுவடை செய்துவிடாதிருக்கவே 3 நாட்கள் முன்னதாக அறிவித்துள்ளோம். அதேபோல், வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளோம். இனி ஒரு வாரத்துக்கு இந்த வெங்காய மண்டிக்கு வெங்காயம் வரத்து இருக்காது. அதேவேளையில், திருச்சி மாவட்டத்தில் வெங்காயத் தட்டுப்பாடும் நேரிடாது’ என்று தெரிவித்தார்.
மீன் மார்க்கெட் மூடல்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காசி விளங்கி பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மொத்த விற்பனை மார்க்கெட்டில், மே 20-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை விற்பனையை வியாபாரிகள் நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.