தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஐஏஎஸ் அந்தஸ்த்தில் ஆணையரை நியமித்து அரசு உத்தரவிட்டது. இதனால் புதிய சர்ச்சை எழுந்தது. புதிய அரசு அமையும்போது முன்பு இருந்ததைவிட நிர்வாகப் பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமே தவிர, அத்துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசு நிதானமாக செயல்பட்டு உரிய முடிவினை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குனர் அந்தஸ்த்தில் அதிகாரி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறைக்கு ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமாரை ஆணையர் அந்தஸ்த்தில் நியமித்து அரசு உத்தரவிட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ராஜினாமா செய்தார். இது போன்ற குழப்பங்களை அரசு தவிர்க்கவேண்டும், நிதானமாக செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.
அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்றாலும், அவற்றை 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று செய்வது சரியாக இருக்காது. துறை சார்ந்தவர்களிடம் முறையாக கலந்தாலோசித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.
அத்தகைய முடிவுகளை எடுத்து செயல்படுத்தும்போது, முன்பு இருந்ததைவிட நிர்வாகப் பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமே தவிர, அத்துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசு நிதானமாக செயல்பட்டு உரிய முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.