கதிர்வேல் 
தமிழகம்

அறுந்து கிடந்த மின்கம்பியை தொட முயன்ற குழந்தையை காப்பாற்றிய தந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கதிர்வேல்(32). பொறியியல் பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக சித்தாதிக்காடு வீட்டில் இருந்து, நிறுவனப் பணிகளை செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், 2 வயதான அன்புச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரது வீட்டின் அருகில் செல்லும் உயரழுத்த மின்கம்பி நேற்று காலை திடீரென அறுந்து விழுந்துள்ளது.

அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அன்புச்செல்வன் மின்கம்பியை தொட முயன்றுள்ளார். இதைப்பார்த்த கதிர்வேல் ஓடிச் சென்று குழந்தையைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, மின்கம்பி கதிர்வேல் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். குழந்தை அன்புச்செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்து மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பேராவூரணி காவல் ஆய்வாளர் வசந்தா, வருவாய்த் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்.அசோக் குமார், கதிர்வேல் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மின்கம்பி அருகில் நின்று கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றி விட்டு, பொறியாளரான தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT