திருநெல்வேலி குறுக்குத்துறையில் முட்புதர்களால் சூழப்பட்டும், கற்கள் பெயர்ந்தும் சிதிலமடைந்துள்ள மண்டபங்கள். படங்கள் மு. லெட்சுமி அருண் 
தமிழகம்

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோர மண்டபங்கள் பலவும் சிதிலமடைந்துள்ளன

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோர மண்டபங்கள் பலவும் சிதிலமடைந்துள்ளன. மண்டபங்களை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாமிரபரணி கரையில் வழிநெடுக நூற்றுக்கணக்கான மண்டபங்கள் சிறியதும், பெரியதுமாய் காட்சியளிக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஆற்றுக்கு நடுவிலும், கரையிலுமாக காட்சியளிக்கும் இந்த மண்டபங்கள் சேர, சோழர், பாண்டியர் காலங்களில் கட்டப்பட்டவை. உற்சவங்கள், விழாக்கள், மக்களின் கூடுகைகளின் தேவைக்காக இந்த மண்டபங்கள் எழுப்பப்பட்டன.

தீர்த்தவாரி மண்டபங்கள், நீத்தார் நினைவு மண்டபங்கள், தைப்பூச மண்டபங்கள் பலவும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. கைலாசபுரம் தைப்பூச மண்டபம், திருப்புடைமருதூர் தைப்பூச மண்டபம் ஆகியவை புனிதமானவை, வரலாற்று சிறப்புகளைக் கொண்டவை. கோயில்களுக்கு திருமஞ்சன நீர் எடுத்துச் செல்ல திருக்குடம் பொருந்திய மண்டபங்களை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் காணலாம்.

வெள்ளக்கோயில் பகுதியில் 42 தூண்களுடன் 150 பேர் வரையில் அமரக்கூடிய சுடுகாட்டு மண்டபம் இருக்கிறது. இதனை, தனது கதையொன்றில் புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார். இதுதவிர ஐங்கோண வடிவிலான மண்டபங்களும் உண்டு. பல்வேறு மண்டபங்களிலும் ஓவியங்களும், கல்வெட்டு குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. மன்னர் காலத்து சின்னங்களும்கூட பொறிக்கப்பட்டிருக்கின்றன.

திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி கரையோரத்தில் அமைந்துள்ள மண்டபங்கள் பலவும் சிதிலமடைந்து வருகின்றன. முழுக்க முள்செடிகளும், புதர்களும் மண்டியிருக்கின்றன. மண்டபங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவிட்டன. மண்டபத்துக்கு செல்லும் வழிநெடுகவும் கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.

இவை இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். கடந்த ஜனவரியில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, இந்த மண்டபங்களை இணைக்கும் பாலங்கள் சேதமடைந்தன.

திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இ.கிருஷ்ணகுமார் கூறும்போது, தாமிரபரணிக்கே அதன் கரையோரத்தில் இருக்கும் மண்டபங்கள்தான் அழகு. அவை சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன. இடிந்துவிழும் நிலையிலுள்ள மண்டபங்களில் இருந்து கற்களை பெயர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.

கைலாசபுரம் தைப்பூச மண்டபத்துக்கு ஆண்டுக்கு 5 முறையாவது தீர்த்தவாரிக்கு சுவாமியும், அம்பாளும் வருவது வழக்கம். சமீபகாலமாக தைப்பூசம், சித்ரா பவுர்ணமிக்கு மட்டுமே சுவாமியும், அம்பாளும் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த மண்டபத்தைச் சுற்றி முள்செடிகளும், புதர்களும் மண்டியிருப்பதே இதற்கு காரணம். மண்டபத்தை சுற்றிலும் திறந்த வெளி கழிப்பிடமாக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்துக்கு செல்லும் வழிநெடுகவும் கழிவுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்.

தாமிரபரணி கரையோர மண்டபங்களை புனரமைத்து பாதுகாக்க அரசுத்துறைகளும், தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

SCROLL FOR NEXT