பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கினால் உடனே தெரிவிக்க வேண்டும்: மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு திருப்பத்தூர் நகராட்சி உத்தரவு

ந. சரவணன்

கரோனா தொற்று பாதித்தவர்கள் சுய சிகிச்சை எடுத்துக் கொள்வதைத் தடுக்க மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்குவோரின் விவரங்களைச் சேகரித்து வழங்க வேண்டும் என, மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு‌ அதிகரித்து வருகிறது. நோய் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், பலர் இந்த அறிகுறிகள் உடலில் காணப்பட்டால், தாங்களாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று, மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இதனால், கரோனாவுக்கு ஆரம்ப சிகிச்சை இல்லாமல் நோய் முற்றி, சுவாசப் பாதையில் பிரச்சினை ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட பிறகுதான் அரசு மருத்துவமனைக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மருந்துக் கடை உரிமையாளர்கள் மற்றும் லேப் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் புதிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறது.

அதன்படி, "இனி வரும் நாட்களில் மருந்துவரின் பரிந்துரைக் கடிதம் இல்லாமல் எந்த மருந்துக் கடையிலும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. குறிப்பாக, காய்ச்சல், உடல் வலி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வழங்கவே கூடாது.

அதேபோல, ஆய்வகங்களில் (லேப்) சி.டி.ஸ்கேன் போன்ற கரோனா தொடர்பான எந்த பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடாது. அப்படி மேற்கொள்ளும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து, நகராட்சி நிர்வாகத்திடமோ அல்லது சுகாதாரத்துறை அலுவலகத்திலோ தெரிவிக்க வேண்டும்.

மறைக்க முயன்றால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுடன், சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை மேற்கொள்வோர் குறித்த தகவல்களைச் சேகரித்து வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT