தமிழகம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக உதவி கேட்பு மையம்: அமைச்சர் தலைமையில் குழுவினர் ஆய்வு

செய்திப்பிரிவு

சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வருவாய்த்துறை, மாநகராட்சி, தெற்கு ரயில்வே ஒருங்கிணைப்புடன் தொழிலாளர் துறையின் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கக் காலத்தில் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், பொதுமுடக்கம் காரணமாக எதிர்கொள்ளும் சிரமங்களைத் தெரிவித்து உதவி கோர ஏதுவாக தமிழக முதல்வர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க தொழிலாளர் துறையால் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அவை நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றன.

மாநில அளவிலான உதவி மையத் தொலைபேசி எண்கள் 044 -24321408 // 044 24321438.

தமிழ்நாடு அரசின் பல்வேறு தொழிலாளர் நலப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பகுதியாக, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வருவாய்த்துறை, மாநகராட்சி, தெற்கு ரயில்வே ஒருங்கிணைப்புடன் தொழிலாளர் துறையின் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் துறையின் உதவி மையத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் உணவு, உறைவிடம் வசதிகளை மேம்படுத்திட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணத்திற்காகக் காத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள். மதிய உணவு வழங்கி தொண்டாற்றி வரும் தன்னார்வலர்களை அமைச்சர்கள் பாராட்டினார்கள்.

இந்த ஆய்வின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் முகமது நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் வள்ளலார், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாதர் ரெட்டி, ரயில் நிலைய மேலாளர் முருகன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, சென்னை தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT