கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி வணிகர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து வாணியம்பாடியில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகமாகி உள்ளதால் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது பொதுமக்களுக்குத் தேவைப்படும் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி விதிமுறைகளுடன் செயல்படும் கடைகளுக்குக் கூட அரசு அதிகாரிகள் கடும் அபராதம் விதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து அத்தியாவசியக் கடைகளை மூடுவதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர் கூறும்போது, ''திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வணிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாட்டுகளுடன் அத்தியாவசியக் கடைகள் மட்டும் திறக்கப்படுகின்றன.
ஆனால், கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி ஆய்வுக்கு வரும் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கரோனா ஊரடங்கை மீறியதாகக் கூறி ஒவ்வொரு கடைக்கும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கின்றனர். குறிப்பாகக் காவல் துறையினர் வியாபாரிகளைத் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்துகின்றனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்தால் ரூ.300 வரை சம்பாதிக்க முடியும் சூழ்நிலையில், ரூ.3 ஆயிரம், 5 ஆயிரம் அபராதம் விதிப்பது வியாபாரிகளை மேலும் நசுக்குவதாக உள்ளது. எனவே, அரசு அதிகாரிகளைக் கண்டித்து வாணியம்பாடியில் மறு அறிவிப்பு வரும் வரை அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் அடைப்பதாக வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.
அப்போது வணிகர் சங்கப் பேரமைப்பு வாணியம்பாடி நகரச் செயலாளர் செல்வமணி உட்படப் பலர் உடனிருந்தனர்.