தமிழகத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பாதித்த தொகுதி மக்களுக்கு உதவிட, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பிரத்யேக செல்பேசி எண்ணை அறிவித்துள்ளார்.
இதுகுறித்துத் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் இரு கல்லூரிகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தயார் செய்யப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கரோனாவில் இருந்து மீண்டவர்கள் வீடுகளுக்குச் சென்றபிறகும் 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு உதவிடும் வகையில் 76 678 678 99 என்ற பிரத்யேக செல்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுப் பயனடையலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி எண் நேற்று (18ஆம் தேதி) அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உதவிகளைக் கேட்டுள்ளனர்.