திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரிப்பதுடன், தினமும் 20 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் நிகழ்கின்றன. இதனால், திண்டுக்கல் மின்மயானத்தில் இறந்தோரை தகனம் செய்ய உறவினர்கள் அதிகநேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல்லில் கூடுதலாக ஒரு மயானம் சீரமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. பிற மாவட்டங்களை விட மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே கரோனா தொற்று பாதிப்பு இருந்தது.
இந்த மாத தொடக்கம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
அதிகபட்சமாக மே மாதம் 15 ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 458 என அதிகரித்தது. பழநி பகுதியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 148 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இறப்பு விகிதம் அதிகரிப்பு:
கரோனா தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை தினமும் பத்துக்கும் குறைவாக இருந்தபோதும், பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இறப்பு விகிதம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மின்மயானத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 20 மணிநேரத்திற்கும் மேலாக பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் அதிகபட்சமாக திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஐந்து உடல்களே எரியூட்ட வந்தநிலையில், கடந்த சில தினங்களாக 20 க்கும் மேற்பட்ட உடல்கள் மின்மயானத்திற்கு எரியூட்ட கொண்டுவரப்படுகின்றன.
இங்கு எரியூட்ட தாமதமாவதால் அருகிலுள்ள எரியோடு மயானத்திற்கும் சில உடல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மின்மாயனத்திற்கு கொண்டுவரப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 25 ஐ கடந்தது. இதனால் மின்மயான ஊழியர்கள் 24 மணிநேரமும் பணிபுரியும் நிலை ஏற்பட்டது.
மின் மயானத்தில் பராமரிப்புப் பணி கூட மேற்கொள்ள நேரமில்லாத நிலை நிலவுகிறது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் வேடபட்டியில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் மயானத்தை இன்று பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.
கடந்த 2016 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மயானம் போதிய உடல்கள் எரியூட்ட வராததால் முழுமையாக பயன்பாட்டில் இல்லை.
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மின்மயானத்திற்கு தினமும் 20 க்கும் மேற்பட்ட உடல்கள் வருவதால் அதிகநேரம் காத்திருக்கவேண்டிய நிலையில், வேடபட்டி எரிவாயு மயானம் சீரமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு வந்தது.
பயன்பாட்டிற்கு வந்த முதல் நாளிலேயே 10 உடல்கள் எரியூட்ட பதிவு செய்யப்பட்டன. இந்த மயானத்தில் உடல்கள் எல்.பி.ஜி., கேஸ் பயன்படுத்தி எரியூட்டப்படுகின்றன. இதன் மூலம் இறந்தவர்களின் உறவினர்கள், உடல்களை எரியூட்ட அதிகநேரம் காத்திருக்கவேண்டியநிலை ஏற்படாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.