அம்பத்தூர் ஆவின் பால் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட் கவர்களில் மறுசுழற்சி குறியீடு இடம்பெற வேண்டும். வீணாகும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசபரி ஈஸ்வரன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்பத் தூரில் கொட்டப்படும் பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவர்களை மறுசுழற்சி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறோம். வரும் 29-ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப் படுகிறது. அதற்கான அறிவிக் கையில், பங்கேற்கும் நிறுவ னங்கள், முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதிய ளிக்கும் வகையில் பிரமாண பத்திரம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ‘‘பிரமாண பத்திரம் போதாது. ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துள்ள நிறுவனமாக இருக்க வேண்டும். மேலும், எவ்வாறு பிளாஸ்டிக் பாக்கெட்டு களை சம்மந்தப்பட்ட நிறுவனம் மறுசுழற்சி செய்யும் என்பது குறித்த செயல்திட்டத்தையும் வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் கொண்ட திருத்த ஒப்பந்தப்புள்ளியை ஆவின் நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.