தமிழகத்தில் நிலவிவரும் இபதிவு குளறுபடிகளை நிவர்த்தி செய்ய பழைய இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தினைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா முதல் அலை வீசியபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் முறையை அறிமுகம் செய்தார்
இதில் விண்ணப்பிப்பவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குரிய முகவரியுடன், என்ன தேவைக்கு செல்ல வேண்டுமோ அதற்கான ஆவணத்துடன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதனை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் வழங்குவார்கள். இதனால் சிரமமின்றி மக்கள் சென்றுவந்தனர் அதேபோல் வெளியில் தேவையில்லாமல் செல்லுவதும் தடுக்கப்பட்டது
தற்போது இ பாஸ் முறைக்குப் பதிலாக இ பதிவு முறையை அரசு செயல்படுத்தியுள்ளது. இதன்படி வெளியில் செல்ல விரும்போர் https://eregister.tnega.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த சான்றை மட்டும் வைத்துக் கொண்டால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்குச் செல்ல வேண்டும் என்றாலே இபதிவு வேண்டும் என்று கூறப்பட்டது
ஆகவே தமிழகத்தில் ஒரே மாதிரியான பழைய இபாஸ் முறையையே அரசு செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே இருந்த இபாஸ் நடைமுறை 38 வருவாய் மாவட்டங்களில் சிறப்பாக செய்யப்பட்டது.
மக்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் ஆகியவற்றிக்குச் செல்ல இந்த நடைமுறை சிறப்பாக இருந்தது . மக்களும் மிகுந்த கவனத்துடன் இருந்து திருமணம், இறப்பு, மருத்துவம், ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கு உரிய ஆவணம் கொடுத்துச் சென்றனர்.
இதில் நல்ல பலன் கிடைத்தது. ஆகவே அரசு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி செயல்படுத்திய இ.பாஸ் நடைமுறையை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தினால் தமிழகத்தில் எந்த குளறுபடியும் இல்லாமல் மக்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.