அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக திமுக மூத்த தலைகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறதாம். இதுபற்றி சமூக வலைதளங்களில் பகிரங்கமாகவே சிலர் கருத்துகளை பதிவிட்டுவருகிறார்கள். குறிப்பாக, கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியும் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்களாம். “செல்லூர் ராஜூ ரேஞ்சுக்குத்தான் எங்கள் ஐயாவை மதிப்பிடுகிறதா தலைமை?” என்று ஐபி வட்டாரம் புழுங்கிக் கொண்டிருக்கிறது.
நேரு உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாராம். ஆனால் உள்ளாட்சியை இரண்டாக உடைத்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு அவரை அமைச்சராக்கிவிட்டார்கள். அதிமுக ஆட்சியின் அமைச்சர் வேலுமணி போல் டாம்பீகமாக இருக்கலாம், கட்சி மாநாடுகளுக்காக வாங்கிப் போட்ட கடன்களை சமாளிக்கலாம் என நினைத்திருந்த நேருவுக்கு இது பெருத்த ஏமாற்றம். மூத்த அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கும் விஷயத்தை உள்வாங்கி இருக்கும் ஸ்டாலின், ஒருசிலருக்கு இலாகாக்களை மாற்றிக் கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படி மாற்றம் வந்தால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நேருவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை ஐபிக்கும் கூடுதலாக ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்