திருமுக்கூடல் அடுத்த சித்தனக்காவூர் ஏரியின் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், வருவாய் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமுக்கூடல் அடுத்த சித்தனக்காவூர் ஏரி நிரம்பியது. 180 ஏக்கரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியால், 250 ஏக்கர் விளை நிலங் களின் 2 போக சாகுபடிக்கு பாசன வசதி அளிக்க முடியும். இந்த ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் பட்சத்தில், சங்கிலி தொடராக அருகில் உள்ள 5 ஏரி களுக்கு தண்ணீர் செல்லும்.
இந்நிலையில், சித்தனக்காவூர் ஏரியின் ஒரு மதகில் உடைப்பு ஏற் பட்டதால், அருகில் உள்ள விளை நிலங்களையும் 40 குடியிருப்புகளை யும் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, பொதுப்பணித்துறை மற்றும் வட்டாட்சியருக்கு தகவல் அளித்த பிறகுகூட, உடைந்த மதகை சீரமைக்கவோ, தண்ணீரை வெளி யேற்றவோ நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சித்தனக்காவூர் விவசாயிகள் கூறியதாவது: ஏரியின் மதகு திடீரென உடைந்து தண்ணீர் வேகமாக வெளியேறியது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் மூலம் தகவல் அறிந்த நாங்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தோம். கிராம நிர்வாக அலுவலர் மட்டும் நேரில் வந்து, 120 சாக்கு பைகளை வழங்கி, மணல் கொண்டு உடைந்த பகுதியை அடைத்துக் கொள்ளுங் கள் எனக்கூறி சென்றுவிட்டார்.
இதனால், விவசாயிகள் அனை வரும் ஒன்றிணைந்து ஏரியின் அருகில் இருந்த 2 பனை மரங் களை வெட்டி, உடைந்த பகுதியில் பொருத்தி, மணல் மூட்டைகளால் சிறிய அளவில் தடுப்புகளை ஏற் படுத்தியுள்ளோம். ஆனாலும், தண்ணீர் வெளியேறி வருகிறது.
விளைநிலங்கள் மற்றும் குடி யிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள தகவலை தெரிவித்தும், உத்திர மேரூர் வட்டாட்சியரோ, பொதுப் பணித் துறையினரோ, யாரும் இங்கு வரவில்லை. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் 2 போகம் பயிர் வைக்கலாம் என்ற நம்பிக்கையை இழந்து ஏமாற்ற மடைந்துள்ளோம் என்றனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டாட்சியரை தொடர்புகொள்ள முடியவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் இது குறித்து கேட்டபோது, ‘சித்தனக் காவூர் ஏரியின் மதகு உடைந்தது குறித்து தகவல் ஏதும் இல்லை. எனினும், தற்போது தகவல் கிடைத் துள்ளதால், வருவாய் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி ஏரியின் உடைந்த மதகை சீரமைக்க நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.