குமளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளர்கள். 
தமிழகம்

விழுப்புரம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்ப திமுகவினர் முயற்சி?

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் அருகே குமளம் கிராமத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையத்தில் 10 பேர் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ”குமளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில், திமுகவினர் 10 பேர் எங்களிடம் வந்து நீங்கள் வேலை செய்யக் கூடாது; சென்று விடுங்கள். எங்கள் ஆட்கள் வேலைக்கு வருவார்கள். நெல் கொள்முதல் நிலையம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மிரட்டுகிறார்கள். இந்த ஆட்சியில் மிரட்டல் இருக்காது என்று நம்பினோம். ஆனால் நடப்பது வேறாக உள்ளது” என்று பேசியுள்ளனர்.

இதுகுறித்து அங்கு பணியாற்றும் ராமதாஸ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “குமளம் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக இருக்கும் முருகன், குமரன் உள்ளிட்ட 10 பேர் ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் எங்களை வேலையை விட்டு போக சொன்னார்கள். மேலும் நிலைய அலுவலர் பிரதாப்பிடம் சென்று இதுகுறித்து பேசியபோது, அவர் வேலையை விட்டு எல்லாம் எடுக்க முடியாதுஎன்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன் பின்பு திமுக ஊராட்சிச் செயலாளர் முருகன், வளவனூர்காவல் நிலையத்தில், என்னுடன்தில்லை நடராஜன், பழனி ஆகிய3 பேர் மீது திமுகவை நாங்கள் தரக்குறைவாக, குறை சொல்லி பேசியதாக புகார் அளித்து, சிஎஸ்ஆர் வாங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதுபற்றி நிலைய அலுவலர் (பொறுப்பு) பிரதாப்பிடம் கேட்டபோது, “17-ம் தேதி திமுகவினர் வந்து சென்றனர். வேலையை விட்டு எடுக்க எல்லாம் சொல்லவில்லை. மதிய உணவுக்காக நான் நிலையத்தை பூட்டிவிட்டு சாப்பிட சென்றபோது, இங்கு பணியாற்றும் கூலி தொழிலாளர்கள் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு பூட்டி விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர். 18-ம் தேதி இங்கு மின் தடை என்பதால் பணி நடைபெறவில்லை. இவர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு எடைபோட ரூ.2-ம், மூட்டைகளை லாரியில் ஏற்ற மூட்டை ஒன்றுக்கு ரூ.1.24 பைசா என அரசு நிர்ணயித்துள்ளது” என்றார்.

இதுகுறித்து கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, “மூட்டை பிடிக்கவும், லோடு ஏற்றவும் கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்ற புகாரின்பேரில் நிலைய அலுவலரை சந்தித்து ஊராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பேசியுள்ளனர். இதனால் அங்கு வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் ஆத்திரமடைந்து திமுக மீது வீண்பழி சுமத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT