தமிழகம்

கரோனா முழு ஊரடங்கு தீவிரமானால் கிராமங்களில் வாகனம் மூலம் ஆவின் பால் விநியோகம்: பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டால், கிராமப்புற மக்களுக்கு வாகனங்கள் மூலம் ஆவின் பால் விநியோகிக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் 2-வது கையெழுத்து ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து வழங்கும் திட்டமாகும். அதன்படி பால் குறைப்பு கடந்த 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பால்வளத் துறை அமைச்சர் நாசர், சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பொது மேலாளர்கள், பால்வளத் துறை பதிவாளர்கள் மற்றும் ஆவின் தலைமையிட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, “முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டாலும் எவ்விதத் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு நேரடியாக வாகனங்கள் மூலம் ஆவின் பால் கிடைக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பால் விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT