கோப்புப் படம் 
தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை: ரூ. 76 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவ மனையில் ரூ.76 லட்சம் மதிப்பில், நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியில் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.

இந்நிலையில், நாட்டில் அரசுமருத்துவமனைகளில் பிஎம் கேர்ஸ்நிதியிலிருந்து 550 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுரை வாடிப்பட்டி, வேதாரண்யம், ஆற்காடு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலை அமைகிறது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில், ரூ.76 லட்சத்தில் நிமிடத்துக்கு 200 லிட்டர்ஆக்சிஜன் தயாரிக்கும் வகையிலான ஆலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை நேற்று ஆய்வுமேற்கொண்டு, விரைவில் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரும்படி அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தினார். ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிவிட்டால், மருத்துவமனையின் அன்றாட ஆக்சிஜன் தேவை நிவர்த்தியாகும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT