என்எல்சி மருத்துவமனை. 
தமிழகம்

வடமாநிலங்களுக்கு சென்று வரும் பணியாளர்களால் நெய்வேலியில் அதிகரிக்கும் கரோனா? - உள்ளூர் தொழிலாளர்கள் அச்சம்

ந.முருகவேல்

வடமாநிலம் சென்றுவரும் என்எல்சி பணியாளர்கள் மற்றும் சிஐஎஸ்எஃப் வீர்ரகளால் நெய்வேலி நகரில் கரோனா தொற்று அதிகரிப்பதாகவும், அவ்வாறு சென்றுவர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்தை வலியுறுத்தியுள் ளனர்.

நெய்வேலி நகரில் சுமார் 75 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இவர்களில் என்எல்சி ஊழியர்களின் குடும்பம் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் அடங்கும். தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரிக்கும் சூழலில் நெய்வேலி நகரில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளது. குறிப்பாக, நெய்வேலி நகரில் பாதிக்கப்பட்டவர்கள் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு 3 இடங்களில் கரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கி அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளொன் றுக்கு சராசரியாக 5 பேர் வரை உயிரிழப்பதாகவும், நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்த தகவலால் என்எல்சி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நெய்வேலி நகரில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதுகவலை அளிப்பதாக கூறும் தொழிற்சங்கத்தினர், தொற்று அதிகரிப்பதால் 50 சதவிகித பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவித்துள்ளது. ஆனால் என்எல்சி நிறுவனத்தில் அந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடிப்பதில்லை. இதனால் தொற்று பரவுவது ஒருபுறம் என்ற போதிலும், வடமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்புவதாலும் தொற்று பரவுகிறது.

இதேபோல் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பயிற்சிக்காக வடமாநிலம் சென்று வருகின்றனர். அவர்களாலும் தொற்று பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

என்எல்சி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் கருவி இல்லாததால் நோயின் அளவை அறிய முடியவில்லை. இதுபோன்று பல்வேறு குறைபாடுகள் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நெய்வேலி நகரில் பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

இதுதொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான அதொஊச தலைவர் வெற்றிவேல் கூறுகையில், “கரோனா தொற்றால் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்கும், செவிலியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்தது போன்று ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கரோனா பரிசோதனையை நெய்வேலியிலேயே மேற்கொள்ள உபகரணங்கள் வாங்க வேண்டும் என்று என்எல்சி தலைவரைநேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். கரோனா தொற்றால் உயிரிழக்கும் என்எல்சி தொழிலாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியுள் ளோம்” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் தலைமை அதிகாரி சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, “சிடி ஸ்கேன் ஜூன் மாதத்தில் வந்துவிடும். கரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் வயது மூப்படைந்தவர்களே. மேலும், வட மாநிலம் சென்றுவரும் பணியாளர்களை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நிறுவனத் தலைவர் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். விரைவில் தொற்றில்லா நகரமாக நெய்வேலி திகழும்” என்றார்.

SCROLL FOR NEXT