திருநெல்வேலியில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து விசாரிக்கும் போலீஸார். படம்: மு. லெட்சுமி அருண். 
தமிழகம்

தேவையின்றி சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு திருக்குறளை எழுதவைத்து போலீஸார் நூதன தண்டனை

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் முழு ஊர டங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் எழுதவைத்து போலீஸார் நூதன தண்டனை வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் பலரும் தேவையின்றி வெளியில் சென்று வருகின்றனர். இதை தடுக்கவும், கண்காணிக்கவும் மாநகரின் பல்வேறு பகுதி களிலும் போலீஸார் சாலைகளில் தடுப்புகளை அமைத்திருக் கிறார்கள். இருப்பினும் ஏதாவது ஒரு காரணத்தை கூறிக்கண்டு வாகன ஓட்டிகள் திரிவது தொடர்கிறது. போலீஸாரிடமி ருந்து தப்பிக்க பலரும் சிறிய சந்து களுக்குள் புகுந்து சென்று வருகிறார்கள். `மாநகரில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்’ என, மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் எச்சரித்திருந்தார்.

அதன்படி, வண்ணார்ப் பேட்டையில் நேற்று சாலை தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகன ஓட்டிகளிடம் ஏதாவது 5 திருக்குறளை எழுதும்படி துணை ஆணையர் சீனிவாசன் உத்தரவிட்டார். வாகன ஓட்டிகள் திருக்குறளை எழுதி கொடுத்த பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருக்குறள் தெரியாதவர்கள், தங்கள் செல்போனில் திருக்குறளை தேடிக் கண்டுபிடித்து மனப்பாடம் செய்து எழுதி கொடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 103 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 973 பேர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT