சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் பொருட்கள் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்கள் அவதி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன்கடைகள் மூலம் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரேஷன்கடைகள் மூலம் கரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நிவாரணத் தொகை வழங்கினாலும் அத்தியாவசி பொருட்களையும் தடையின்றி விநியோகிக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மே 15-ம் தேதியில் இருந்து ரேஷன்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ‘கரோனா நிவாரணத் தொகை வழங்கும்போதே பொருட்களையும் விநியோகித்தால் மீண்டும் ரேஷன்கடைகளுக்கு செல்ல தேவையில்லை. ஆனால் பொருட்கள் வழங்காததால் மீண்டும் அலைய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது,’ என்று கூறினர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் கூறுகையில், ‘கரோனா நிவாரணத் தொகை வழங்குவதில் இடையூறு ஏற்படும் என்பதால் பொருட்கள் விநியோகித்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
நிவாரணத்தொகை வழங்கி முடித்த கடைகளில் உடனடியாக பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளோம்,’ என்று கூறினர்.