தமிழகம்

எழுத்து தான் தாத்தாவுக்கு தைரியத்தை கொடுத்தது: கி.ரா. பேத்தி அம்சா பேட்டி

எஸ்.கோமதி விநாயகம்

எழுத்து தான் தாத்தாவுக்கு தைரியத்தை கொடுத்தது என மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ரா.வின் மகன் வழி பேத்தி அம்சா தெரிவித்தார்.

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன் என்ற கி.ரா.வின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகே இடைசெவல் ஆகும்.

புதுச்சேரியில் வசித்து வந்த அவர் நேற்று காலமானார். அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும். இடைசெவலில் அவர் படித்த பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனை கரிசல் எழுத்தாளர்கள் வரவேற்றுள்ளனர். புதுச்சேரியில் இருந்து கி.ரா.வின் உடல் நேற்று சொந்த ஊரான இடைசெவலுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று (19-ம் தேதி) காலை அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி அருகே இடைசெவலில் உள்ள வீட்டில் இருந்த கி.ரா.வின் இளைய மகன் பிரபாகரனின் மகள் அம்சா செய்தியாளர்களிடம் கூறும்போது, தாத்தா இறுதி வரை எழுத்து உலகிலேயே இருந்தார். அண்டரெண்டப் பட்சி என்ற கையெழுத்து பிரதி எழுதியிருந்தார். யார் பண்ணாத புதிய விஷயமாக இருந்தது. அதிகம் போகாது என நினைத்த வேளையில் புதிதாக இருந்ததால் வாசகர்களை நன்றாகவே சென்றடைந்தது. கரோனா காலத்தில் மிச்ச கதைகள் என்ற நூல் எழுதினார். பாட்டியின் இறப்புக்கு பின்னர் ரொம்பவே கலக்கமாகி விட்டார்.

அதன் பின்னர் அதிலிருந்து தன்னைத்தானே தெளிப்படுத்திக்கொண்டு, அண்டரெண்டப் பட்சி, மிச்சக்கதைகள் என்ற நூல்களை எழுதினார். அதனை தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து மீண்டும் நடக்க முடியாத சூழ்நிலையிலும் எழுத்து தான் அவருக்கு தைரியத்தை கொடுத்தது. மீண்டும் எழுத தொடங்கி இருந்தார். ஆனால், அவரது இறப்பு என்பது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று.

தன்னம்பிக்கை அதிகம்

உடல்நிலை விஷயத்தில் அவருக்கு தன்னம்பிக்கை அதிகம். எவ்வளவோ உடல்நிலை பிரச்சினைகளை அவர் கடந்து வந்துள்ளார். அதனால் இதையும் அவர் கடந்து விடுவார். செப்.16-ல் அவருக்கு 100-வது பிறந்த நாள் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம். அவருக்கு நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். எங்கள் தாத்தா கி.ரா.வுக்கு அரசு மரியாதை என்பது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். இது எங்கள் குடும்பத்துக்கு செய்கின்ற பெரிய பெருமையாக நினைக்கிறோம். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், என்றார் அவர்.

எழுத்தாளர்களின் பீஷ்மர்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் கூறுகையில், “சென்னைக்கு அடுத்த எழுத்தாளர்கள் அதிகம் உள்ள ஊர் கோவில்பட்டி தான். கரிசல் நிலத்துக்கென புதிதாக இலக்கிய வகையை அறிமுகப்படுத்தி, அதில், கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியலை பதிவு செய்து, கலாப் பூர்வமாக சிருஷ்டி பண்ணி, சாகித்ய அகாடமி விருது வாங்கும் அளவுக்கு எங்களை தயார்ப்படுத்தி உள்ளார் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது.

எழுத்தாளர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், எழுத்தாளர்களை உருவாக்கி எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. கோவில்பட்டியில் 15 படைப்பாளிகளை உருவாக்கியது கி.ரா. தான். இது சாதாரணம் கிடையாது. எழுத்தாளர்களை உருவாக்க வேண்டுமென்றால் விஷேச குணங்கள் இருக்க வேண்டும். அவர்களது வீட்டிலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி பார்த்தால், கி.ரா.வின் மனைவி கணவதியம்மாள் எங்களுக்கெல்லாம் தெய்வம்.

கி.ரா.வை சந்திக்க சென்றால், எங்களுக்கு புத்தகங்களை வழங்குவார். அடுத்த முறை சந்திக்கும்போது, அவர் புத்தகங்களை படித்தீர்களா என்று அக்கறையாக விசாரித்து, அந்த புத்தகங்களில் இருந்து எங்களிடம் கேள்வி கேட்பார். எங்களுக்கு அவர் தான் பீஷ்மர். அவரது இறப்பு, எங்களது சொந்த தந்தை இறந்தது போன்று உணர்கிறோம். முதன்முறையாக தமிழக அரசு எழுத்தாளருக்கு மரியாதை கொடுக்கிறது. ஒரு படைப்பாளிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரமாக பார்க்கிறோம்,” என்றார்.

இசையை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்

அட்சரம் பதிப்பகம் உரிமையாளர் என்.ஏ.எஸ்.சிவக்குமார் கூறுகையில், “காருகுறிச்சி அருணாசலத்தின் உறவினர் குருமலை பொன்னுச்சாமியிடம் கி.ரா. முறைப்படி சங்கீதம், ஹார்மோனியம், வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டவர். விளாத்திகுளம் நல்லப்பசுவாமிகள் பாடுவதை கேட்டேனோ, அதன் பின்னர் பாடுவதை நிறுத்தி விட்டேன் என்னிடம் தெரிவித்துள்ளார். என்னை சங்கீத சிவக்குமார் என்று தான் கி.ரா. கூப்பிடுவார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வந்த நான் அட்சரம் பதிப்பகம் தொடங்க காரணமாக இருந்தவர் கி.ரா. தான்.

வீணை தனம்மாள், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் நல்லப்பசுவாமிகள், புல்லாங்குழல் கலைஞர் டி.ஆர்.மகாலிங்கம் போன்றோர் குறித்தும் பாலசரஸ்வதியின் நாட்டியம் குறித்தும் என்னிடம் அதிகமாக பேசி உள்ளார். நாங்கள் பெரும்பாலும் இசை குறித்து தான் பேசியிருக்கிறோம். கி.ரா. வீட்டில் நல்லப்பசுவாமிகள் தங்கும்போது, தினமும் ஒரு ராகம் பாடுவார். அதனால் வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாட்களையும் கிழமையை குறிப்பிடாமல் ராகத்தின் பெயரை சொல்லியே குறிப்பிட்டு பேசி உள்ளார்,” என்றார்.

SCROLL FOR NEXT