எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு புதுச்சேரி அரசுத் தரப்பில் நடந்த காவல்துறை மரியாதை. | படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரி அரசு மரியாதையுடன் இடைசெவலுக்குப் புறப்பட்ட கி.ரா.வின் உடல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி அரசு சார்பில் போலீஸ் மரியாதை தரப்பட்டு இடைசெவலுக்கு எழுத்தாளர் கி.ரா.வின் உடல் இன்று புறப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த மூத்த எழுத்தாளர் கி.ரா. நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மதியம் கி.ரா.வின் உடலுக்கு புதுச்சேரி அரசுத் தரப்பில் போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன் (என்.ஆர்.காங்), சிவா (திமுக), வைத்தியநாதன் (காங்), கல்யாணசுந்தரம் (பாஜக) மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டி இடைசெவல் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் தமிழகக் காவல்துறை வாகனப் பாதுகாப்புடன் புறப்பட்டது.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, "இரவுக்குள் அவரது உடலை இடைசெவல் கொண்டுசென்று மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகள் நாளை நடக்கும். அப்போது தமிழக அரசு மரியாதை நடக்கிறது" என்று குறிப்பிட்டனர்.

அத்துடன் கி.ரா. குடும்பத்தினர், "புதுச்சேரி, தமிழக அரசுகளுக்கு நன்றி" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT