வாணியம்பாடியில் நோய்த் தொற்றுப் பரவல் அதிகமுள்ள 5 இடங்கள் 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, 8,000 ஆக இருந்த மொத்த பாதிப்பு, தற்போது 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்தபடியாக, வாணியம்பாடி பகுதியில் நோய்ப் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, வாணியம்பாடி நகராட்சிப் பகுதிகளில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், வளையாம்பட்டு, உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நோய்ப் பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, இதைத் தடுக்கும் விதமாக, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில், சுகாதாரப் பணியாளர்கள், கரோனா தடுப்புப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்த குழு ஒன்று உருவாக்கப்பட்டு, கிராமப் பகுதிகளில் நோய் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிராமப் பகுதிகளுக்கு வீடு வீடாகச் செல்லும் இக்குழுவினர், ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் உள்ளனர்? அதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா? கர்ப்பிணிப் பெண்கள் யாரேனும் உள்ளனரா? காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு, உடல் வலி, உடல் சோர்வு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்தவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்ற விவரங்களைச் சேகரிக்கின்றனர்.
அதேபோல, ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு 'எஸ்பிஓ-2' அளவு குறைவாக இருக்கிறதா? எனப் பரிசோதனை செய்து, பாதிப்பு இருந்தால் அதன் தன்மையைப் பொறுத்து அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? அல்லது கரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்துவதா? அல்லது அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதா? என்பது குறித்தும், இக்குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 450 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், நகராட்சிக்கு உட்பட்ட பெரியபேட்டை, நேதாஜி நகர், ஆசிரியர் காலனி, புதூர், சென்னாம்பேட்டை என, மொத்தம் 5 இடங்கள் 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு நோய் தடுப்புப் பணிகளை நகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது.
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 'ஹாட் ஸ்பாட்' என அறிவிக்கப்பட்ட இடங்களில், கிருமிநாசினி தெளித்து, நோய்த் தடுப்பு மருந்துகளை தூவி, சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கரோனா குறித்த விழிப்புணர்வும், தகுதியுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார். அப்போது, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காய்தரி சுப்பிரமணி, வட்டாட்சியர் மோகன், நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரம், நகராட்சி பொறியாளர் ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.